ஹோர்முஸ் நீரிணையில் தீப்பிடித்த நான்காவது எண்ணெய் கப்பல்: ஈரானின் பகிரங்க எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz), சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நான்காவது எண்ணெய் தாங்கிக் கப்பலும் கடற்கண்ணியில் (Naval mine) மோதித் தீப்பிடித்து எரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் கடற்படை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையில் கடற்கண்ணியில் சிக்கிச் சேதமடைந்துள்ள நான்காவது எண்ணெய் கப்பல் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் கடற்படை
ஈரான் கடற்படை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி,
குறித்த எண்ணெய் கப்பல் தனது வழிசெலுத்தல் மற்றும் அடையாளங்காணும் கருவிகளை அணைத்துவிட்டு, ஹோர்முஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் உள்ள தடைசெய்யப்பட்ட கடற்பரப்பில் ரகசியமாகப் பயணித்தபோதே கடற்கண்ணியில் மோதியுள்ளது.
கடற்கண்ணியில் மோதியதைத் தொடர்ந்து கப்பலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு, கப்பலுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஈரான் கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், கப்பலின் பெயர் அல்லது பணியாளர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்குக் கடல்சார் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதும் ஈரானிய ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள ஈரான் கடற்படை, வெற்றுப் பேச்சுக்கள் மற்றும் பொய்கள் மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என அமெரிக்காவிற்கு மறைமுகமாகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நான்கு எண்ணெய் கப்பல்கள் அடுத்தடுத்து தீப்பிடித்துள்ளதால் சர்வதேச கடல்சார் காப்பீட்டு நிறுவனங்களும் எண்ணெய் விநியோகச் சங்கிலியும் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |