கல்விக்கான 500 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு : எதிர்க்கட்சியின் அதிரடி நடவடிக்கை
கல்விச் சீர்திருத்தங்களுக்காக ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் ரூபாய் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தலைமையிலான குழுவினர் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன் பின்னர் இது குறித்து ஊடகங்களிடம் பேசிய முஜிபுர் ரஹ்மான், "கையூட்டல் ஊழல் ஆணைக்குழுவில் கையூட்டல் தொடர்பான முறைப்பாடுகளை மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை, நிதி முறைகேடு மற்றும் நிதி வீணடிப்பு தொடர்பாகவும் முறைப்பாடு அளிக்க முடியும்.
நிதி வீணடிப்புக்கு பொறுப்பு
அதன் அடிப்படையிலேயே 500 மில்லியன் ரூபாய் நிதி வீணடிக்கப்பட்டது குறித்து முறைப்பாடு செய்துள்ளோம்.

கல்வி அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், இந்த நிதி வீணடிப்புக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவே (Harini Amarasuriya) பொறுப்பேற்க வேண்டும்.
கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் நியாயமான நடைமுறையைப் பின்பற்றவில்லை.
கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் போது ஒரு 'வெள்ளை அறிக்கை' சமர்ப்பிக்கப்பட்டு, அது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |