நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை! சுமார் 59 மரங்கள் முறிந்து விபத்து
கொழும்பு (Colombo) மாநகர சபையின் அதிகார வரம்புக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 7 நாட்களில் சுமார் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக இவ்வாறு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன (Bhadrani Jayawardena) சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, விஹாரமகாதேவி பூங்காவில் மாத்திரம் சுமார் 19 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “கொழும்பின் பிரதான வீதிகளில் உள்ள சில பாரிய மரங்கள் சீரற்ற காலநிலை காரணமாக முறிந்து வீழ்ந்துள்ளன.
காவல்துறையினரின் ஆதரவுடன் முறிந்து வீழ்ந்த மரங்களை வீதிகளில் இருந்து அகற்றும் நடவடிக்கையை கொழும்பு மாநகர சபை முன்னெடுத்துள்ளது.
முறிந்த வீழ்ந்த பல மரங்கள், கடந்த காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கவில்லை. சீரற்ற வானிலை காரணமாகவே அவை முறிந்து வீழ்ந்துள்ளன.
அத்துடன், 50 முதல் 150 வருட பழமையான சுமார் 200 மரங்கள் இருக்கின்றன. எனினும், தற்போது நிலவும் காலநிலையுடனான அபாய நிலையை கருத்தில் கொண்டு குறித்த மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |