ஏழு கோடி வருடங்களுக்கு முந்தைய டைனோசரின் புதைபடிவம் கண்டுபிடிப்பு!
பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள க்ரூசி (Cruzy) பகுதிக்கு அடுத்துள்ள மோன்டோலியர் என்ற காட்டுப்பகுதியில் மிகப்பழமையான அரிய டைனோசர் இனத்தின் புதைந்த எலும்புகள் ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆர்வலரான டேமியன் போஷெட்டோ (Damien Moschetti) என்பவரால் கடந்த 2022 ஆம் ஆண்டில் அந்த மலைப்பகுதியில், புதைந்த நிலையில் சில எலும்புகள் தென்படுவதை கண்டு ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
2 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட தொடர் ஆய்வின் பலனாக இந்த அரியவகை டைனோசர் இனத்தின் எலும்புக்கூடுகளின் புதைபடிவம் கண்டறியப்பட்டது.
பொதுமக்கள் பார்வைக்காக
இந்த புதைபடிவத்தை கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் அது 7 கோடி (70 மில்லியன்) வருடங்களுக்கு முன் வாழ்ந்த "டைட்டனோசர்" (titanosaur) எனும் அரிய டைனோசர் உயிரினத்தின் புதைந்த எலும்புகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த டைட்டனோசர் எலும்புக்கூடானது, க்ரூசி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகப்பழமையான டைனோசர்
கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக க்ரூசி நகரை சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் போன்ற உயிரினங்களின் புதைபடிவங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வெளியே கொண்டு வரப்படுகின்றன.
ஆனால், இம்முறை கிடைத்திருப்பது அந்த உயிரினத்தின் எலும்புக்கூட்டை ஆய்வுசெய்ததில் இது இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர் இனங்களில் மிகப்பழமையானது என நம்பப்படுவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |