சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு : வைத்தியசாலைகளில் களமிறக்கப்பட்டுள்ள முப்படையினர்
நாட்டில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் DAT அல்லது வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவுகளை தங்களுக்கும் வழங்க வேண்டுமென கோரி குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், அனைத்து சிறுவர், புற்றுநோய் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளின் சேவைகள் வழமை போல் இடம்பெறும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தாதியர் சங்கம் இணையவில்லை
இதேவேளை, தமது சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இணையவில்லை என அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக, வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35000 ரூபாய் கொடுப்பனவைக் கோரி சுகாதாரத் துறையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அந்தக் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதை அடுத்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இறுதி தீர்மானம்
இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இதுவரையில் சந்தரப்பம் வழங்கப்படாததையடுத்து மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானத்துள்ளதாக 72 சுகாதார தொழிற்சங்கங்கள் அடங்கிய சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதா இல்லையா என்பதை நாளை பிற்பகல் கூடி தீர்மானிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில் குறித்த கூட்டமைப்பின் இணைப்பாளர் ரவி குமுதேஷ், இணை அழைப்பாளர் உபுல் ரோஹன, அரசாங்க சுகாதார முகாமைத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நாமல் ஜயசிங்க, அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ ஆகியோர் கலந்து கொண்டனர்.
பணிக்கமர்த்தப்பட்டுள்ள முப்படையினர்
இந்நிலையில், வைத்தியசாலை பணிகளுக்கு உதவுவதற்காக முப்படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தடைப்படும் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கு தேவையான படையினரை பணிக்கமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பணிப்புரை வழங்கியுள்ளார்.
அதன்படி, தற்போது மேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகளின் மேற்பார்வையில் கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, கராப்பிட்டிய, மஹாமோதர, பேராதனை, அனுராதபுரம் மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலைகள், மாத்தறை, பலாங்கொடை, எகலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, கம்பளை, மீரிகம, ஹோமாகம மற்றும் கேகாலை உட்பட 26 வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதற்கு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது அந்த வைத்தியசாலைகளின் தேவைக்கேற்ப சுமார் 700 இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதுடன், அவசரநிலை ஏற்பட்டால் மேலதிக படையினரை அனுப்புவதற்கு தயார்ப்படுத்துமாறும் பொதுமக்களின் சுகாதார தேவைகளை தடையின்றி வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இராணுவத் தளபதியினால் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகளுக்கு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |