இரசாயன தொழிற்சாலை தீப்பற்றியதால் நச்சுப்புகை - மாணவிகள் பாதிப்பு
கந்தானை புனித செபஸ்தியார் பெண்கள் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் திடீரென பரவிய தீயால் பாடசாலை மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
இன்று (08) காலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் வெளியேறிய புகை காரணமாக கல்லூரி மாணவிகள் 85 பேர் பாதிக்கப்பட்டனர்.
அந்த மாணவிகள் றாகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவமனை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் தொழிற்சாலையின் கணக்காளர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெலிசர கடற்படைத் தளத்தின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் நீர்கொழும்பு மற்றும் கம்பஹா மாநகரசபை தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்ததாக கூறப்படுகிறது.
குறித்த தீ விபத்தினால் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகிவிட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.