மீண்டும் வழமைக்கு திரும்பிய A-09 வீதியின் போக்குவரத்து!
நாட்டில் தொடர்ந்து நிலவி வந்த சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல நாட்களாக தடைப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மற்றும் கண்டி இடையேயான A-09 வீதியின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக வீதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
குறித்த வீதியில் பொதுப் போக்குவரத்து சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம் மற்றும் கண்டி இடையேயான பிரதான வீதி வழக்கம் போல் இயங்கினாலும், வடக்கு மாகாணத்தின் பல முக்கிய வீதிகளின் போக்குவரத்து இன்னும் தடைபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, கிளிநொச்சியில் உள்ள இரணைமடு நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பரந்தனில் இருந்து முல்லைத்தீவு செல்லும் பிரதான வீதியில் உள்ள ஒரு பாலம் கிளிநொச்சியின் புளியன்பொக்கனை பகுதியில் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, நாயாறுவில் உள்ள பிரதான பாலம் வெள்ளத்தில் இடிந்து விழுந்ததால் முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்லும் வீதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வீதியில் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |