சபரிமலை ஐயப்பன் கோயிலின் மாயமான தங்கக் கிரீடம் - தீவிர விசாரணை ஆரம்பம்
சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 55.72 சவரன் எடையுடைய தங்கக் கிரீடம் மாயமாகியுள்ளமை தற்போதைய ஆய்வின்போது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அதற்குப் பதிலாக, அசல் கிரீடத்தை ஒத்த வடிவம் மற்றும் அளவுடைய போலிக் கிரீடம் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், அமிகஸ் கியூரி தலைமையிலான குழுவினர் சபரிமலை திருவாபரணங்கள் மற்றும் நகைகளைச் சரிபார்த்து தணிக்கை செய்து வருகின்றனர்.
போலிக் கிரீடம்
இதன்போது சன்னிதானத்தின் பாதுகாப்பு அறையை ஆய்வு செய்தபோதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த தங்கக் கிரீடம் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும், அது தொடர்பான விபரங்கள் கோயில் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசல் கிரீடத்தில் வைரங்களைப் போன்ற வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், தற்போது பாதுகாப்பு அறையில் கண்டெடுக்கப்பட்டுள்ள போலிக் கிரீடத்தின் எடை அசல் கிரீடத்தைவிட குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு அறையில் காணப்பட்ட கிரீடத்தைச் சோதனையிட்டபோது அதன் எடை 240 கிராம் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐயப்பன் கோயிலின் பாதுகாப்பு அறையில் சிசிரிவி கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான அறிக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |