இராணுவ காவலரணிலிருந்த துப்பாக்கி மாயம் - தீவிர விசாரணையில் காவல்துறை
புத்தளம், சிங்கவில்லுவத்தையில் உள்ள 58வது பிரிவின் இராணுவ காவலரண் ஒன்றில் இருந்து ரி-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் அடங்கிய மகசீன் ஒன்று காணாமல் போயுள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் இராணுவத்தினரால் நேற்று (13) புத்தளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடமை முடிந்து வந்தவேளை

கடந்த 09 ஆம் திகதி இரவு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கடமை முடிந்ததும் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஆயுதக் களஞ்சியத்தில் வைப்பதற்குச் சென்ற போது, துப்பாக்கி ஒன்று காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முகாம் முழுவதும் தேடுதல்

துப்பாக்கி காணாமல் போனது தெரியவந்ததையடுத்து, முகாம் முழுவதும் தேடிய போதும், இதுவரை துப்பாக்கி கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை துப்பாக்கி கண்டுபிடிக்கப்படாததால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில் உள்ள அனைவரிடமும் விடுமுறையில் சென்றவர்களிடமும் துப்பாக்கியை தேடி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் புத்தளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.