மக்கள் நலன் சார்ந்து செயற்படுங்கள் - ராஜபக்சர்களிடம் கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை ராஜபக்ச அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு, காலி போன்ற நகரங்களைப் போல் யாழ்ப்பாண நகரத்தினையும் அபிவிருத்தி செய்யும் முகமாக பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல மில்லியன் ரூபா செலவில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக தூர இடங்களுக்கான பேருந்து தரிப்பு நிலையம், யாழ்ப்பாண மாநகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி என மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் தற்போது அவ்வாறான திட்டங்களை தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் இந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஏன் அவ்வாறு செய்கின்றார்களென தெரியவில்லை? அரசியல் பழிவாங்கலுக்காகவே இவ்வாறு செய்கின்றார்கள் என நினைக்கின்றேன்.
ராஜபக்சாக்கள் தமது பெயர் குறிப்பிடப்படும் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே செயற்படுத்துவார்கள். மக்கள் நலன் சார்ந்து செயற்பட மாட்டார்கள் என்பதே உண்மை” என்றார்.