இஸ்ரேலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை! உலக நாடுகளுக்கு துருக்கி அழைப்பு
பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க இஸ்ரேல் முயற்சிப்பதாகவும், சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மீறி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ள துருக்கி, இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்தோகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் பின்னர் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிரியாவின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் சாதகமான முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும், நாடு முழுவதும் அரசின் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் தேசிய பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச சமூகத்துடனான உறவு
சிரிய மக்கள் தமது நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சர்வதேச சமூகத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் துருக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் சபை குறிப்பிட்டுள்ளது.

சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான தமது உறுதிமொழிகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றாமல், இஸ்ரேல் தொடர்ந்து காசா மற்றும் லெபனானில் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் துருக்கி தேசிய பாதுகாப்புச் சபை குற்றம்சாட்டியுள்ளது.
அத்துடன், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீய சுழற்சியாக மாறியுள்ளதாகவும், இதனால் பிராந்தியம் முழுவதும் பல்வேறு பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட தரப்புகள் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும் என துருக்கி வலியுறுத்தியுள்ளது. மேலும், உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கடுமையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர சம்பந்தப்பட்ட தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய பாதுகாப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.