70 மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் : இனப்பாகுபாட்டின் வெளிப்பாடு என குற்றச்சாட்டு
திருகோணமலை(Trincomalee) ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் இனப்பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof ) தெரிவித்துள்ளார்.
பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மூடி பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
காதுகளை மூடி பரீட்சை எழுதியமை பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம் என சுட்டிக்காட்டியுள்ளதோடு அது ஏனைய பரீட்சார்த்திகளை பாதிக்கின்ற விடயமும் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இனப்பாகுபாடு
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த விடயங்களை சகல தரப்பினருக்கும் தெளிவுபடுத்திய பின்னரும் பெறுபேறு இடைநிறுத்தப்பட்டுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஸாஹிரா கல்லூரியின் வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களின் இனப்பாகுபாட்டின் வெளிப்பாடு இதுவென்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
பரீட்சை மண்டபத்தில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை பெறுபேற்றை இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்ற பரீட்சை மேற்பார்வையாளரின் மனநிலையை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.
பிள்ளைகளின் உரிமை
ஒரே மொழியை பேசும் நாம் இப்படி பிள்ளைகளின் உரிமைகளில் கைவைப்பது ஆரோக்கியமானதல்ல.
பிள்ளைகளினதும் பெற்றோரினதும் இன்றைய சோகமான மனநிலையை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது குறித்து பரீட்சை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். இந்த விடயத்தில் சகல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்று பட வேண்டும்.
இது ஒரு சமூகப் பிரச்சினை கிழக்கு மாகாண முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் மற்றொரு வடிவம் இது‘ எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |