பல்கலைக்கழகங்களில் பகிடிவதை விவகாரம்: துணைவேந்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC), இலங்கை முழுவதும் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில சேனவிரத்ன (Kapila Seneviratne) குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் நடந்து வரும் பகிடிவதை பிரச்சினை உட்பட பல அழுத்தமான பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் முன்னிலை
அத்துடன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இன்று (05) பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இந்த மாணவர்கள் பகிடிவதை நடவடிக்கைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகளால் நேற்று (4) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என்று காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபரீத முடிவெடுத்து உயிரிழந்த மாணவன்
ஏப்ரல் 29 அன்று சமனலவேவா காவல்துறையில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட விசாரணைகளிலிருந்து அவர்களின் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை குறித்த பல்கலைக்கழகத்தின் அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர் சமீபத்தில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்தமை குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
