தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலாவின் கட்சிக்கு விழுந்த பலத்த அடி
கடந்த 30 ஆண்டுகளாக தென்னாபிரிக்க (South Africa) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்கவைத்து ஆட்சி செய்து வந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (African National Congress) கட்சி இம்முறை ஆட்சியை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன .
கடந்த இரண்டு நாள்களாக வாக்கு எண்ணும் பணிகள் அந்நாட்டில் தீவிரமாக நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட 52 சதவீதமான வாக்கு நிலையங்களில் வாக்கு எண்ணப்பட்டுவிட்டதாகவும் அதில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்கு 42.3 வீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (Nelson Mandela) ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வளர பெரும் பங்கு வகித்தார். ஆனால் தற்போது அந்தக் கட்சி சரியாக செயல்படத் தவறியதால் அதன் மீது தென்னாபிரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளமையே அக்கட்சியின் வாக்கு சரிவுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
வெள்ளை இனம்
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் சிறுபான்மையினரான வெள்ளை இன மக்களின் ஆட்சியை வீழ்த்தி 1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்தது .
இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளாக பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, வறுமை என பல்வேறு பிரச்சினைகள் தென்னாபிரிக்காவில் தலைதூக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
காங்கிரஸ் கட்சி
இதனால் இம்முறை தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 40.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் இந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் சில ஒன்றிணைந்து பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதனடிப்படையில், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களில் வரும் கட்சிகள் சிறு சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்யக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தேர்தல் முடிவுகள்
தென்னாபிரிக்க சட்டத்தின்படி முழு தேர்தல் முடிவுகள் தேர்தல் நடந்த ஏழு நாள்களுக்குள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் தேர்தல் முடிவுகளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்க தென்னாபிரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பெற்றவர்களே நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதால் தென்னாபிரிக்காவின் அரசியல் வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே என்பதால் தற்போதைய அதிபர் சிறில் ரமபோசாவின் (Matamela Cyril Ramaphosa) பதவிக்கு ஆபத்து ஏதும் இருக்காது என்றும் சில கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |