நிறைவு பெற்றது மகிந்தானந்தவுக்கு எதிரான மற்றுமொரு விசாரணை! குற்றப்பத்திரிகை தாக்கல்
நோய்க்கிருமி நுண்ணுயிரிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அடங்கிய இயற்கை உரக் கப்பலை இறக்குமதி செய்வதற்கு, சட்டப்பூர்வ அனுமதி பெறாமல் கடன் கடிதங்களை (LC) திறந்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் மகேஷ் லசந்த கம்மன்பில ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதை, கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் இலஞ்ச ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மகிந்தானந்த அலுத்கமகே சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் உள்ள இரண்டாவது சந்தேகநபரான மகேஷ் லசந்த கம்மன்பில நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்நிலையில், விசாரணைகள் நிறைவடைந்து, சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் இலஞ்ச ஆணைக்குழுவின் சட்டப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிபதி, இந்த வழக்கினை மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்காக டிசம்பர் 4 ஆம் திகதியை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |