மற்றுமொரு சிங்கத்திற்கும் தொற்றியது கொரோனா
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய தோர் என்ற பெயருடைய சிங்கத்தின் அருகிலிருந்த மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இதனை உறுதிசெய்துள்ளார். இந்த நிலைமைக்கு மத்தியில், தொற்றுக்கு இலக்காகிய சிங்கத்திற்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மிருகக்காட்சிசாலையில் மிகவும் அரிதான மற்றும் பெறுமதிமிக்க விலங்குகள் உள்ளன என்றும், மிருகக்காட்சிசாலையின் நிர்வாகத்தின் நிர்வாக திறமின்மை காரணமாக இந்த விலங்குகள் பாதிக்கப்படுவதாக அரசு கால்நடை அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் என்.டி. ஹேவகமகே தெரிவித்தார்.
நிர்வாகம் உள்ளூர் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையை புறக்கணித்து வருவதாகவும், வெளிநாட்டினரின் ஆலோசனையின் பேரில் முட்டாள்தனமாக செயல்படுவதாகவும், கொவிட் பாதித்த சிங்கம் உள்ளூர் கால்நடை மருத்துவர்களின் திறமையால் மீண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
நிர்வாகத்தின் இந்த நாடகத்தைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குதிரை ஓடிவிட்டபின் அந்த லாயத்தை மூடுவது பயனற்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.