நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதன்படி, மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் ஆறாம் திகதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் 7 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்திருந்தனர்.

சிறையினுள் நடைபெற்ற போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிக்கச் சென்ற 'மந்த போலீஸ்' எனப்படும் சிறப்புப் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே இந்த பாரிய கலவரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்ததாகத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கொடூரமான மோதல் சம்பவங்கள் குறித்த பின்னணிச் சூழலை ஆராய்வதற்காக, சுயாதீனக் குழுவொன்றை நியமிக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.
இக்குழுவின் கண்டுபிடிப்புகள் நாட்டின் சிறைச்சாலை கட்டமைப்பில் ஆக்கபூர்வமான, நீடித்த சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றூ பிஞ்சே வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |