நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள திட்டமிட்ட சதி: ஜனாதிபதி கடும் குற்றச்சாட்டு
நாட்டை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் நோக்கில் திட்டமிட்ட சதி நடைபெற்று வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும் எனும் தொனிப்பொருளில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய போதெ அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பொது நிதிக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தும் கோரிக்கைகளுக்கு அரசு இணங்கப் போவதில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசுத் துறை ஊதியம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
2028 வரவு - செலவுத் திட்டத்தில் அரசுத் துறை ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக 150 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

மேலதிக சம்பள உயர்வுகள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவது கடன்களை அதிகரிக்கவோ அல்லது மூலதனச் செலவினம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகளுக்கான ஒதுக்கீடுகளைக் குறைக்கவோ கட்டாயப்படுத்தும்.
2027-ஆம் ஆண்டில் அரச வருமானம் 6,230 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் சேவை உள்ளிட்ட மொத்தச் செலவினம் 7,035 பில்லியன் ரூபாவாக உள்ளது.
சம்பளக் கொடுப்பனவு மற்றும் கடன் திருப்பிச் செலுத்தலுக்கே அரச வருமானம் போதாத நிலையில் கடன் மூலம் ஈடுசெய்ய வேண்டிய 805 பில்லியன் ரூபா நிதிப் பற்றாக்குறை திறைசேரிக்கு ஏற்பட்டுள்ளது.
அரசியல் நோக்கங்கள்
2027 ஆம் ஆண்டிற்கான கடன் வரம்பை 3,800 பில்லியன் ரூபாவாக நிர்ணயித்துள்ள நிலையில் 2022 நெருக்கடியின் போது 700 பில்லியன் ரூபா மேலதிகப் பற்றுடன் செயற்பட்டதன் அடிப்படையில் தற்போது திறைசேரியில் 700 பில்லியன் ரூபா வைப்புகள் உள்ளன.
2028 வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் மேலதிகமாக 400 பில்லியன் ரூபா ஒதுக்க எதிர்பார்க்கப்படுவதுடன் அதில் 250 பில்லியன் ரூபா மூலதனச் செலவினத்திற்கும் 150 பில்லியன் ரூபா அரசுத் துறை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கும் ஒதுக்கப்படும்.

அத்தோடு 2028 வரவு - செலவுத் திட்டத்தின் கீழ் 36 சதவீத அதிகபட்ச தனிநபர் வருமான வரி விதிக்கப்படும் மாதாந்த வருமான எல்லையை 500,000 ரூபாவாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது இது 358,333 ரூபாவாக உள்ள நிலையில் 2027 வரவு - செலவுத் திட்டத்தில் 433,333 ரூபாவாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகள் மூலம் வரவு செலவுத் திட்டத்திற்கு அழுத்தம் கொடுத்து நாட்டை நெருக்கடிக்குள் தள்ளும் சதி வலையில் அரசு விழாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, எதிர்க்கட்சி சக்திகள் மதக் குழுக்களையும் உழைக்கும் மக்களையும் தமது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |