பிரிட்டன் தடையின் பின்னணியில் விடுதலைப் புலிகள் : சாடும் சஜித் தரப்பு
முன்னாள் இராணுவ தலைமை அதிகாரிகள் உட்பட நால்வருக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்தமையின் பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சக்திகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா (Ajith Perera) தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு நேற்று (28.03.2025) வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. எமது நாட்டின் ராஜதந்திர செயல்முறையும், வெளிவிவகார அமைச்சின் பணிகளும் பலவீனமடைந்துள்ளன.
பிரித்தானிய தடை
விடுதலை புலிகளுக்கு ஆதரவான சக்திகள் இதன் பின்னணியில் உள்ளன. அல்ஜஸீரா தொலைக்காட்சி நிகழ்ச்சியினூடாக ரணில் விக்ரமசிங்க மீது ஏதோ ஒரு வகையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளனர்.
இதனை மீண்டும் எழுச்சிப் பெறச் செய்ய அவர்கள் செயற்படுகின்றார்கள். ஏனெனில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதே போல யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாகக் கூறும் விடயங்களை விற்பனை செய்து அதில் வாழும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் சர்வதேசத்தில் இருக்கின்றனர்.
அரசாங்கத்தின் அலட்சியம்
சிலர் ஈழத்தை அமைக்கும் நோக்கில் செயற்படுகின்றனர். மேலும் சிலர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை விற்றுச் சாப்பிடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர்.
அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டிய குழுவினரே. அவர்கள் சர்வதேச ரீதியில் உயர் பதவிகளை வகிக்கின்றனர். விசேடமாக ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளில் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.
தற்போதைய அரசாங்கத்தின் அலட்சியமும், இராஜதந்திர விவகாரங்களில் திறமையின்மையும் இராணுவத்தினருக்கு எதிரான கடுமையான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. இது இன்னும் தீவிரமானதாகும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித். பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
