பசிலின் ஆட்டம் ஆரம்பம்! கோட்டாபய, மஹிந்தவுக்கு கடும் நிபந்தனை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு கடும் நிபந்தனை விதித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதற்கு முன்னர் தனக்கு வழங்கப்படும் அமைச்சு பதவி மற்றும் அதன் கீழ் வரும் நிறுவனங்களை வர்த்தமானியில் வெளியிட வேண்டும் என பசில் ராஜபக்ச நிபந்தனை விதித்துள்ளார்.
ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றபோதும் பின்னர் ராஜபக்ச குடும்பத்தில் யாரேனும் ஒருவரது தலையீட்டால் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சை பசில் ராஜபக்சவிற்கு வழங்க நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னர் இணக்கம் வெளியிட்டிருந்த போதும் பின்னர் அது மாற்றமடைந்தது.
இந்நிலையில் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் எட்டாம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக வருவது உறுதி எனவும் அவருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி இராஜாங்க அமைச்சு வழங்கப்பட உள்ளதாகவும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு, முதலீட்டுச் சபை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் பசில் ராஜபக்சவின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் - நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக், மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அமைச்சுக்களில் இருந்தே முக்கிய நிறுவனங்கள் சில பசில் ராஜபக்சவிற்கு வழங்கப்படவுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.