அரசியலமைப்பு பேரவை மீது ஒடுக்கு முறையைப் பிரயோகிக்கும் ரணில் : குற்றம் சாட்டியுள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
சிறிலங்கா அரசியலமைப்புப் பேரவையின் மீது ஒடுக்கு முறையைப் பிரயோகிக்கும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் வெளியிடப்பட்ட கருத்தை, வன்மையாக கண்டிப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் ஆணையின்றி சிறிலங்காவின் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒருவரின் எதேச்சதிகாரப்போக்கு படிப்படியாக மேலோங்கி வருவதை இதன் மூலம் அவதானிக்க முடிவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரணில் மீதான குற்றச்சாட்டு
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 23 ஆம் திகதி உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்புப் பேரவையானது நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் வருவதாகக் கூறியதன் மூலம் அந்த பேரவையின் நோக்கத்தை முற்றுமுழுதாகத் தவறாகப் பிரதிபலித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பகிரங்கமாக வெளியிடப்பட்ட மிக மோசமானதும், ஆபத்தானதுமான இந்த கருத்தை ஆட்சி நிர்வாகம் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் விதமாக அரசியலமைப்பின் ஊடாக நிறுவப்பட்ட கட்டமைப்பை வலுவிழக்கச் செய்வதாக அந்த சங்கம் கூறியுள்ளது.
தாம் முன்மொழிகின்ற ஒரேயொரு நபரின் பெயரை அரசியலமைப்புப் பேரவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதோ, அல்லது அவ்வாறு ஏற்றுக் கொள்ளாவிடின் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்களை அச்சுறுத்துவதையோ ஏற்றுக் கொள்ள முடியாதது என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்களின் இறையாண்மையை புறக்கணிக்க கூடாது
இந்த நிலையில், அரசியலமைப்பின் ஊடாக உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள மக்களின் இறையாண்மையை எவ்விதத்திலும் புறக்கணிக்க முடியாது என அந்த சங்கம் கூறியுள்ளது.
சிறிலங்கா அதிபரின் இந்த எதேச்சதிகாரப்போக்கு தொடருமாக இருந்தால், அது மீண்டுமொரு அரசியல் எழுச்சி ஏற்படுவதற்கும், பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கும் வழிவகுக்கும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |