விளக்கமறியலில் இருக்கும் நபரை விடுவிக்க பணம் பெற முயன்ற இருவர் கைது - மட்டக்களப்பு நீதிமன்றத்தின் முன் சம்பவம் (Photos)
மட்டக்களப்பு - காத்தான்குடியில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் இருக்கும் ஒருவரை நீதிமன்றில் இருந்து வெளியில் எடுத்து தருவதாகக்கூறி குறித்த நபரின் தயாரிடம் 2 இலட்சம் பணம் பெற முயன்ற தயாரின் சகோதரன் உட்பட இருவரை நேற்று (06) மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் வைத்து வான் ஒன்றுடன் கைது செய்துள்ளதாகவும பிரதான சந்தேகநபர் தப்பியோடிவிட்டார் என மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், காத்தான்குடியைச் சர்ந்த ஆண் ஒருவர் கடந்த முதலாம் திகதி ஜஸ் போதைப் பொருளுடன் காத்தான்குடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை நீதிமன்றில் இருந்து வெளியில் எடுத்து தர 2 இலட்சம் ரூபாவை கல்கமுக பிரதேசத்தைச் சேர்ந்த முகமட் காசிம் முகமட் றிபான் என்பவர் கோரியுள்ளதாக காத்தான்குடி முதலாம் பிரிவு மோதினார் லேன் சாவியா வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சிரேஷட காவல் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசனைக்கமைய மட்டு. தலைமையக காவல்துறை பொறுப்பதிகாரி பஜ.கே.ஹாட்டியாராச்சியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி முகமட் ஜெஸலி தலைமையிலான காவல்துறையினர் பகல் மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு முன்னால் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது வான் ஒன்றில் வந்திருந்தவர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்தபோது அங்கிருந்து கப்பம் கோரிய பிரதான நபர் தப்பி ஓடியுள்ள நிலையில், வானில் வந்திருந்த முறைப்பாடு செய்தவரின் சகோதரன் மற்றும் வான்சாரதியை காவல்துறையினர் கைது செய்ததுடன் வான் மற்றும் 4 கையடக்க தொலைபேசிகள், ஆவணங்களை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
