பூசா சிறைச்சாலை அதிகாரி படுகொலை : பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு
பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சிறிதத் தம்மிக்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை இன்று (16) பலபிடிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்தின் (Thailand) பாங்கொக் நகரை நோக்கிச் செல்ல முற்பட்ட போது சந்தேக நபர் நேற்று (15) கைது செய்யப்பட்டார்.
காவல்துறை விசாரணை
குறித்த சந்தேக நபர் அம்பலாங்கொட, குளீவத்த பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய விஜேமுனி லலந்த பிரிதிராஜ் குமார என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தெற்கில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவர் கரந்தெனிய சுத்தா என்பவரின் பிரதான துப்பாக்கிதாரியாக இருந்தவர் என காவல்துறையினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை காலி, தலகஹ பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி இந்த துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு பூசா சிறைச்சாலை அதிகாரி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
