நடனத்தின் போது இடிந்து வீழ்ந்த கட்டிட பகுதி: கிழக்கு பல்கலை நடனக் கல்லூரியில் சம்பவம்
கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் மாடிக் கட்டிடத்தின் மேல்பாகங்கள் இடிந்து வீழ்ந்ததில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (08-05-2026) இடம்பெற்றுள்ளது.
நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இறுதி வருட மாணவிகளே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கட்டிடம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மேல் மாடிக் கட்டிடமாக நிர்மாணிக்கத் திட்டமிட்டு கீழ்ப்பகுதி மட்டும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடம் உறுதியானது அல்ல என்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மத்தியில் மாணவர்களின் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சம்பவ தினம் இறுதியாண்டு மாணவிகள் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மாடிக் கட்டிடத்தின் மேல் தரையின் ஒரு பகுதி இடிந்து அவர்கள் மீது வீழ்ந்துள்ளது.
இதையடுத்து, மூன்று மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்ட தரம் தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அதன் பொறியியலாளர் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |