இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நடேசனுக்கு மீண்டும் அழைப்பு
முன்னாள் பிரதி அமைச்சரும் ராஜபக்ஸவினரின் நெருங்கிய உறவினருமான நிரூபமா ராஜபக்ஸவின் கணவரான திருக்குமார் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் ஊடாக சொத்துக்களை இரகசியமாக கொள்வனவு செய்தமை குறித்து மேலதிக வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அரசதலைவராக இருந்த போது, நீர் வழங்கல் பிரதியமைச்சராக பதவி வகித்த நிருபமா ராஜபக்ஷவின் கணவரான பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன், வெளிநாட்டு நிறுவனங்களின் பெயரில் கொள்வனவு செய்த ரகசிய சொத்துக்களை வைத்திருப்பதாக அண்மையில் உலகளாவிய ரீதியில் கசிந்த பெண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த உத்தரவிற்கமைய பண்டோரா ஆவணங்கள் தொடர்பில், திருக்குமார் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதற்கமைய, கடந்த வெள்ளிக்கிழமை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான திருக்குமார் நடேசன் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்த நிலையிலேயே, எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.