அமெரிக்காவுக்கு பதிலடியை அறிவித்த கனேடிய பிரதமர்! செப்டம்பர் முதல் நடைமுறை
செப்டம்பர் 8 முதல் அமெரிக்காவின் உலோகங்கள், இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் மற்றும் பிற ஏனைய இறக்குமதிப் பொருட்களுக்குக் கனடா வரி விதிக்கும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
கனேடிய பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50% வரிகளுக்குப் பதிலடியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல நாட்கள் நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமையும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படவில்லை.
கேள்விக்குறியாகியுள்ள வர்த்த ஒப்பந்தம்
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான சிக்கலான உறவு மேலும் மோசமடைந்துள்ளதுடன், அமெரிக்க-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் (USMCA) என அறியப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் கேள்விக்குறியாகியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கனடா மீதான ட்ரம்பின் புதிய வரிகள் வயின், மரத்தினாலான உபகரணங்கள், பால் பொருட்கள், சீமெந்து, ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட துறைகளைப் பாதிப்பதுடன், அமெரிக்காவிற்கான கனடாவின் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏற்றுமதியையும் உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் கார்னி, "கனேடிய தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு ஈடாகக் கனடாவும் அதே அளவு வரி விதிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |