கனடாவில் இந்திய திரைப்படங்கள் வெளியிடுவதால் பரபரப்பு
கனடாவில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்ட சில திரையரங்குகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டதால், அங்குள்ள திரையரங்குகள் இந்தியப் படங்களின் திரையிடலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு திரையரங்கில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை தாக்குதல் நடந்துள்ளது.
முதன்முறையாக செப்டம்பர் 25 அன்று தீ வைப்பு முயற்சி செய்யப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 2 அன்று அதே திரையரங்கின் நுழைவாயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல்கள்
இந்த தாக்குதல்கள், ரிஷப் ஷெட்டியின் “காந்தாரா: ஏ லெஜெண்ட் சாப்டர் 1” மற்றும் பவன் கல்யாணின் “தே கால் ஹிம் ஓஜி” என்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டபோது நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதன் பின்னர், திரையரங்க நிர்வாகம் பாதுகாப்பு காரணங்களால் இந்தியப் படங்களின் திரையிடலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
முதல் சம்பவம் நடந்த செப்டம்பர் 25 அன்று அதிகாலை 2 மணியளவில் ஒரு சாம்பல் நிற எஸ்யூவி வாகனம் திரையரங்கின் வெளியில் வந்து நிமிடங்கள் சில நின்று சென்றதாக கண்காணிப்பு காட்சிகளில் பதிவாகியுள்ளது.
அதன் பின் இரண்டு சந்தேக நபர்கள் தனித்தனி வாகனங்களில் வந்து, திரையரங்கின் நுழைவாயிலில் பெட்ரோல் போன்ற திரவம் ஊற்றி தீ வைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனால் பெரிய சேதம் ஏற்படவில்லை என்றாலும், அச்சத்தை உருவாக்கியிருந்தாக கூறப்படுகிறது.
குற்றவாளிகளின் நோக்கம்
அதே திரையரங்கில் ஒக்டோபர் 2 அன்று அதிகாலை 1.50 மணியளவில் மற்றொரு மர்ம நபர் நுழைவாயிலை நோக்கி பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
காவல்துறையினர், குற்றவாளி கருமையான தோல் நிறம் கொண்ட, கனமான உடல் அமைப்புடைய ஆண் என்றும், கருப்பு உடையும் முகமூடியும் அணிந்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தாக்குதல்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், இரண்டு சம்பவங்களுமே திரையரங்கின் நுழைவாயிலை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குற்றவாளிகளின் நோக்கம் குறித்து காவல்துறை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றும், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தின் பின்னால் காலிஸ்தான் அமைப்பினர் இருக்கலாம் என்றும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
