போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் மீது சர்வதேச தரத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்
தன்மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் மீது சர்வதேச அமைப்புக்களின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான செனல் 4 காணொளியில் தன்னை இணைத்து கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் காவல்துறைமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று(07) முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
சர்வதேச அமைப்புகள் ஊடாக விசாரணை
காவல்துறைமா அதிபருடன் கலந்தாலோசித்து, அவரது ஒப்புதலுடன் குறித்த முறைப்பாட்டை பதிவுசெய்யுமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.
இதற்கமைய, இன்றைய தினம் அவரை சந்திப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளேன்.
செனல் 4 காணொளியில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபரான ஹன்சீர் அசாத் மௌலானா என்னுடன் இணைந்து பணியாற்றியவர், புகலிடத்தை பெறுவதற்காக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அவர் சில பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனக் கூறி, குடும்பத்துடன் வெளிநாடு செல்ல அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றிருந்தார்.
ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு சென்ற அவர், இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
தான் 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்ததாகவும், சிறைக்கு இருந்து கொண்டு அசாத் மௌலானா கூறுவதை போன்று தாக்குதல் திட்டமொன்றை தீட்டுவது சாத்தியமற்றது.
அவர் தொடர்பில் சர்வதேச அமைப்புகள் ஊடாக விசாரணையொன்றும் முன்னெடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
