இந்திய பெருங்கடலில் சீன உளவு கப்பல் : உன்னிப்பாக கண்காணிக்கும் இந்திய உளவுத்துறை
இந்திய , மாலைதீவு உறவில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையை தனக்கு சாதகமாக்கியுள்ள சீனா,தனது உளவுகப்பலை இந்திய பெருங்கடலுக்கு அனுப்பி வைத்துள்ளது.
சீனாவின் ஆய்வு கப்பல்களில் ஒன்றான "சீயாங் எங் ஹோங் 03" என்ற கப்பலே தற்போது இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்துள்ளது.
எனினும் இந்த கப்பல் வருகை ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று என்று மாலைதீவு அரசு விளக்கம் அளித்து உள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள்
இதன்படி நேற்று காலை அந்த கப்பல் இந்தோனேசியாவில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் வந்துள்ளது. அந்த கப்பல் மாலைதீவை நோக்கி செல்வதாக தெரியவந்துள்ளது. அது அடுத்த வாரம் மாலைதீவு துறைமுகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த கப்பல் இந்திய பெருங்கடலில் முக்கிய பகுதிகளை ஆய்வு செய்ய வந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த கப்பலில் அன்ரனா, சென்சார் மற்றும் செயற்கைகோள்கள் பறக்க விடுவதை கண்காணிக்கும் கருவிகள், இராணுவ தளங்களை ஆய்வு செய்து படம் பிடிக்கும் இலத்திரனியல் கருவிகள் உள்பட பல்வேறு அதிநவீன ஆய்வு கருவிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த கப்பல்தான் கடந்த மாதம் இலங்கைக்கு வருவதாக இருந்தது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசு அந்த கப்பலுக்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து தற்போது அந்த கப்பல் மாலைதீவு உதவியுடன் இந்திய பெருங்கடலில் ஊடுருவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எத்தனை நாட்கள் தங்கியிருக்கும்
சீன ஆய்வு கப்பல் எத்தகைய பணிகளில் ஈடுபடும் எத்தனை நாட்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் இருக்கும் என்று அறிவிக்கப்படவில்லை.
மாலைதீவு அதிபர்முகமது முய்சு சமீபத்தில் சீனாவுக்கு சென்று விட்டு வந்த நிலையில் சீன உளவு கப்பல் இந்தியாவை நெருங்கி வந்திருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த கப்பலின் நகர்வை இந்திய உளவுத்துறையும், இந்திய கடற்படையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |