இலங்கையின் ஆதரவு இந்தியாவிற்கே..! மேலும் உரைத்து கூறும் மற்றொரு அரச தரப்பு
கனடா மற்றும் இந்தியாவுக்கிடையிலான முறுகல் நிலை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு ஆதரவளிப்பதாக வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை நியாயமானது என அதிபரின் தொழிற்சங்க தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நபராக அலி சப்ரி தவறான கூற்றுக்களை முன்வைக்க மாட்டார் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கிடையிலான முறுகல் நிலை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கையின் நட்பு நாடு இந்தியா. இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய போது இந்தியா பல நிதி உதவிகளை எமக்கு வழங்கியிருந்தது.

இலங்கைக்கு மருந்து பொருட்களை வழங்கியிருந்தது. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா அறிவித்தது.
தற்போது கனடா மற்றும் இந்தியாவுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து, நாம் எமது அயல் நாடுக்கு உதவும் வகையிலான சாதாரணமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பான உள்ளக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்"என்றார்.