சீன கப்பலுக்கு அனுமதி நிலுவையில்! இந்தியாவை ஏமாற்றுகிறதா இலங்கை...
சீனாவின் ஆராய்ச்சி கப்பலான சி யான் 6, நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலின் பிரவேசம் குறித்து இந்தியா கரிசனையை வெளியிட்டுள்ளதாகவும் அது குறித்து இலங்கையும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி சீனா கப்பல் இலங்கை துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவுள்ளமை மற்றும் இந்தியாவின் கரிசனைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த போதே அலி சப்ரி இதனைக் கூறியுள்ளார்.
சி யான் 6 பிரவேசிப்பதற்கு அனுமதி
வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பது குறித்து இலங்கையிடம் நிலையான செயன்முறை உள்ளது எனவும் இதனை உருவாக்கும் போது இந்தியா உட்பட நேசநாடுகளுடன் கலந்தாலோசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில காலமாக பேச்சுக்கள் இடம்பெறுகின்றது எனக் கூறியுள்ள அலி ஷப்ரி, இந்தியா நீண்டகாலமாக தனது கரிசனைகளை வெளியிட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையான செயன்முறையை பின்பற்றும் வரை பிரச்சினையில்லை எனவும் அதனை பின்பற்றாவிட்டால் மாத்திரமே பிரச்சினை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குள் அடுத்த மாதம் ஒக்டோபரில் சி யான் 6 பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அது குறித்து இன்னமும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனவும் அலி ஷப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அமைவிடம்
இதற்கு முன்னதாக, அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிநாட்டு கப்பல்களுக்காக நிலையான செயற்பாட்டு நடைமுறையை இலங்கை கொண்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கையானது தற்போது வரும் கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செயற்பட முடியாதென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.