நாட்டில் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்துள்ள மக்கள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இலங்கையில் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்வது குறைந்து வரும் போக்கில் உள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜனத் சித்ரால் பெர்னாந்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (26-11-2026) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தமது வளங்களைச் செலவிடுவது பலனளிக்காது என மக்கள் கருதுவதால் வழக்குத் தாக்கல் செய்வது குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமானப் பணி
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதாகத் தெரிகிறது.
அடிப்படை உரிமை மனுக்களைத் தாக்கல் செய்வதில் மக்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தோன்றுகிறது.

2024-ஆம் ஆண்டில் 350 மனித உரிமை மனுக்களும் மற்றும் 2025-ஆம் ஆண்டில் 226 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இவ்வருடம் இதுவரை 89 மனித உரிமை மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு ஏனைய அமைச்சுகளைப் போலவே நீதி அமைச்சின் செலவின முன்னேற்றமும் குறைவாக உள்ளதாகவும் கட்டுமானப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 24 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் பணம் சம்பாதிப்பதற்காக நீதிமன்றங்களைப் பயன்படுத்துவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டிய சித்ரால் பெர்னாந்து, பணம் சம்பாதிப்பதற்காக நீதித்துறை நிறுவப்படவில்லை எனவும் மக்களுக்கு நீதி வழங்கும் முக்கிய நோக்கங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |