சர்ச்சையில் சிக்கிய செல்வம் அடைக்கலநாதன்: CIDக்குச் சென்ற முறைப்பாடு!
நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மீது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் இவ்வாறு முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ரஜீவ்காந்த் இன்றையதினம் (11.11.2025) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குரல் பதிவு
மேலும் கருத்து தெரிவித்த ராஜ்குமார் ரஜீவ்காந்த், “செல்வம் அடைக்கலநாதன் தனது கட்சியில் உள்ள ஒரு உறுப்பினர் சுரேஷ் என்பவருடன் தொலைபேசியில் உரையாடுகின்ற ஒரு குரல் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

குறித்த குரல் பதிவில் பல்வேறு விடயங்கள் உரையாடப்படுவதுடன் செல்வம் அடைக்கலநாதன் சுரேஷ் என்ற நபருடைய உயிருக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து, சில நாட்களின் பின்னர் சுரேஷ் என்கின்ற நபர் நீர்கொழுப்பு பகுதியிலே தவறான முடிவெடுத்து உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது.
குறித்த நபர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.
மேலும், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதுடன் இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அக்கறை கொள்வதாக இல்லை.
எனவே, இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என தாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ராஜ்குமார் ரஜீவ்காந்த் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அண்மைய தினங்களாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் (09.11.2025) நடைபெற்ற ரெலோ கட்சியின் தலைமைக் குழு கூட்டத்திலும் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |