காலநிலை நியாய மன்றத்தை ஆரம்பிக்கும் இலங்கை
எதிர்வரும் 2023 ஐ.நா காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் (COP 28) 28ஆவது கூட்டத்தில், பாதிக்கப் படக்கூடிய மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான காலநிலை நியாய மன்றத்தை (Climate Justice Forum) இலங்கை ஆரம்பிக்கத் தயாராக உள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
காலநிலை நீதியை உறுதிப்படுத்துதல், இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு நிதியளிப்பதை துரிதப்படுத்துவதற்கு பாரம்பரியமற்ற மாற்று அணுகுமுறையை பேணும் பொதுவான நோக்கத்துடன், காலநிலை நியாய மன்றம் (Climate Justice Forum) ஒன்றை நிறுவுவதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளைகளுக்கு முன்னுரிமை அளித்து கலந்துரையாட அரசாங்கங்கள், அரசாங்கங்களுக்கிடையேயான நிறுவனங்கள் மற்றும் பிற தரப்பினர்களுக்கு தளத்தை வழங்கும் ஆசிய பசுபிக் அமைச்சர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளின் ஐந்தாவது மன்றத்தை 2023 ஒக்டோபர் 03 முதல் 06 வரை கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்துடன் இணைந்து சுற்றாடல் அமைச்சு, இதனை ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் தடை

தம்புள்ளை மற்றும் ஹிரிவடுன்ன ஆகியவற்றை சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களாக அபிவிருத்தி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர் / ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள், மற்றும் பிளாஸ்டிக் இடியப்பத் தட்டுகள் ஆகியவை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடை செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) ஆனது நாட்டின் காற்றின் தரப் பாதுகாப்பு நிலையை அறிக்கை அளிப்பதற்கான அவசரகால பதில் செயல் திட்டம் ஒன்றை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் மேலும், சுற்றாடல் அமைச்சு, மின்சாரம் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் (GSMB), கனிம போக்குவரத்தை முறைமைப்படுத்தும் இலக்குடன், வாகன எண் மற்றும் வழித்தட விவரங்களுடன் கனிமப் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை வழங்கத் தொடங்கியுள்ளது.
இந்த விவரங்கள் அனைத்தும் கணினியில் உருவாக்கப்பட்டவை என்றும், இது அனுமதி பெற்றவரால் விவரங்கள் மாற்றப்படுவதைத் தடுக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கனிமப்பொருட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களை புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் (GSMB), தரவுத்தளக் கட்டமைப்பு மூலம் தடுப்புப்பட்டியலில் சேர்க்கும் நடைமுறையையும் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.