ராஜபக்ச குடும்பத்துக்கும் பலஸ்தீனுக்குமான தொடர்பு : மனம் திறந்த நாமல்
இஸ்ரேல் - பலஸ்தீனிற்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்துலக நாடுகளும் ஓரணியில் திரள வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று (20) கூடிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடும் எதிர்ப்பு
எமது நாட்டில் மூன்று தசாப்தமாக யுத்தம் இடம்பெற்றது, இதனால் யுத்தம் மற்றும் யுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எமது மக்களுக்கு நன்கு அனுபவம் உள்ளது.
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளோம், எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் இடம்பெறுமானாலும் அதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிடுகிறோம்.
இந்த யுத்தத்தால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைத்துலக சமூகத்திற்கு உள்ளது.
ஏற்கனவே, 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன எல்லைகள் தொடர்பில் ஐ.நாவில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன, ஆகவே, இருதரப்பினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் யுத்தத்தை நாம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
நெருங்கிய தொடர்பு
பல உயிர்கள் இருதரப்பிலும் இழக்கப்பட்டுள்ளன, ஐ.நாவினால் இந்த எல்லைகள் தொடர்பில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் இருதரப்பினரும் செயல்பட வேண்டும்.
பலஸ்தீனத்துக்கும் எனது தந்தை மகிந்த ராஜபக்சவுக்கும் எமது குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.
மகிந்த ராஜபக்சதான் பலஸ்தீன-இலங்கை நட்புறவுச் சங்கத்தை உருவாக்கியிருந்தார்.
பலஸ்தீனத்தில் வீதியொன்றுக்கு மகிந்த ராஜபக்சவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
உலகில் எந்தவொரு நாட்டிலும் வேறு நாட்டின் தலைவரின் பெயரை வைப்பதில்லை, அந்த கௌரவத்தை பலஸ்தீனம் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கியுள்ளது.
பொருளாதார அபாயங்கள்
இந்த யுத்தம் மத்திய கிழக்கு நாடுகளை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அது உலகில் ஏனைய நாடுகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
உக்ரைன் - ரஷ்ய போர் உலக பொருளாராத்துக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியதைப் போல நாம் இந்த இஸ்ரேல் - பலஸ்தீன போரும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இவ்வாறான நெருக்கடியான நிலையினால் எமது நாடு எதிர்கொள்ளவுள்ள பொருளாதார அபாயங்கள் குறித்து முன்னெச்சரிக்கையாக நாம் செயற்பட வேண்டும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.