புதிய ஆசிரிய நியமனம் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட தகவல்
தொழிற்சங்கங்களின் இணக்கப்பாடு
தொழிற்சங்கங்களின் இணக்கப்பாடு கிடைக்குமானால் தற்போது கல்வி காரியாலயங்களில் பணிபுரியும் 24,000 பட்டதாரிகளையும் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (4) வாய்மூல கேள்வி விடைக்கான நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரன எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
வயதெல்லை பிரச்சினைகள்
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதில் வயதெல்லை பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அரச சேவையில் ஆசிரியர்களாக நியமித்துக் கொள்வதற்கு அவர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
மேற்படி பட்டதாரிகளில் ஆசிரியர் சேவைக்கு விருப்பம் தெரிவித்துள்ளவர்களில் அதிகமானவர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவர்களாக காணப்படுகின்றனர்.
அவ்வாறு அவர்களுக்கு நியமனம் வழங்கினால் தொழிற்சங்கங்கள் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
ஏனெனில் யாப்பின் பிரகாரம் பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்வதாக இருந்தால் 35வயததை தாண்டக்கூடாது.
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் அது தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியம்.
அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களின் இணக்கப்பாடு கிடைக்குமானால் மேற்படி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
அதிகரிக்கும் கொடுப்பனவு
அவ்வாறு நியமிக்கப்படும் போது அவர்களுக்கான கொடுப்பனவும் மேலும் ஆறாயிரத்தி 700ரூபாவால் அதிகரிக்கும்.
அவர்கள் தற்போது காரியாலய உத்தியோகத்தர்களாகவே செயல்பட்டு வருகின்றனர்.
அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தொழிற்சங்கங்களின் முடிவே தேவைப்படுகிறது என்றார்.
