வவுனியா இரட்டை கொலை வழக்கு: சந்தேகநபருக்கு இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!
வவுனியா (Vavuniya) இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் அவரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா - தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.
இரட்டை கொலை
குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த வழக்கின் விசாரணை முடிவடையவில்லை எனக்கூறி சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி மனுதாக்கல் செய்ததையடுத்தே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் சம்பவத்தின் பின்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கனடாவிற்கு அனுப்பி வைத்ததாகவும் பிணை வழங்கப்பட்ட பின்னர் அவரும் கனடாவிற்கு தப்பிச்செல்ல இருப்பதாகவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த கொடூரமான கொலை சம்பவம் பிரதேச மக்களை அச்சமுற செய்ததாக தெரிவித்த நீதிபதி, சந்தேகநபர்களை 30.01.2025 வரையான காலப்பகுதிக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |