தையிட்டி விகாரைக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான வழக்கு 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (24) மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள், தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மல்லாகம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளில் ஒரு வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வருகின்ற வருடம் ஜனவரி மாதம் 07ஆம் திகதிக்கு அந்த வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.
எதிராளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளோர்
அந்த வழக்கிலே கைது செய்யப்பட்ட ஐவர் உட்பட வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் என்று 30இற்கும் மேற்பட்டோர் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டு அந்த வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
இந்த வழக்கிலே நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதேச சபை தவிசாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே இந்த வழக்கு தொடர்ந்து இழுத்தடிக்கப்படுவது எங்கள் மத்தியிலே இதற்கான ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
அந்தவகையிலே எங்கள் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டாலும், வழக்குகள் இப்படி தவணை போடப்பட்டு வருடக்கணக்கில் கடத்தப்பட்டாலும் நாங்கள் எங்களுடைய இனவிடுதலைக்காக போராட்டங்களை கைவிடப்போவதில்லை.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |