பிரதேச சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய வருமான வரி பரிசோதகர் : நீதிமன்றின் உத்தரவு
யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய வருமான வரி பரிசோதகர் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த வருமான வரி பரிசோதகருக்கு எதிராக உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் (28) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் மிக நீண்ட விவாதத்தை அடுத்து வருமான வரி பரிசோதகர் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப்பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்
இது குறித்து மேலும் தெரியவருகையில், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடந்த மாதம் சபை அமர்விற்காகச் சென்று மண்டபத்தில் அமர்ந்திருந்த போது அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவர்களை வெளியேறுமாறு கூறி உறுப்பினர்களின் கௌரவத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் வருமான வரி பரிசோதகருக்கு எதிராக உறுப்பினர்களால் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக நேற்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீரப்பிணையில் செல்வதற்கு உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை அவரை பிணை எடுப்பதற்காக 4 வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கடமையிலிருந்தாவாறே நீதிமன்றிற்கு சென்றுள்ளாதாகவும், இதனால் அவர்கள் தமது கடமைகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக சபை செயலாளரை தொடர்புகொண்டு கேட்டதுபோது வருமான வரி பரிசோதகர் கடமையிலிருந்தபோதே குறித்த பரிசோதகருக்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் அவர் சீருடையில் செல்ல முடியும் என்றும், அவரை பிணை எடுப்பதற்கு சென்றவர்கள் விடுப்பிலேயே சென்றதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |