சர்வதேசத்திற்கு வலுவான செய்தியை வழங்கவேண்டும்! தையிட்டி போராட்டத்திற்கு அழைப்பு
எதிர்வரும் மூன்றாம் திகதி தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருக்ககின்ற போராட்டத்திற்கு அனைவரும் கட்சி பேதம் மற்றும் பேதங்களை மறந்து கலந்து கொள்ளுமாறு சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனர் அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கட்சி பேதம் மற்றும் பொது அமைப்பு பாகுபாடுகளைக் கடந்து அனைவரும் தையிட்டி போராட்டத்தில் எதிர்வரும் மூன்றாம் திகதி கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வலுவான செய்தி
இதன் ஊடாக ஒரு வலுவான செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்லக்கூடியதாகவும் இருக்கும்.

மேலும், அழுத்தம் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும் என்றும், இதனால் அனைவரும் கலந்து கொண்டு எமது வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்துமாறும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்
நீதிமன்ற அழைப்பு
தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை அனுப்பபட்டுள்ளது.
மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பலாலி காவல்துறையினரால் தாக்கல் செய்த வழக்கின்படி நீதிமன்ற பதிவாளரால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஐந்தாம் திகதி பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டது.
விகாராதிபதியின் பதவி உயர்வு
கடந்த டிசம்பர் 21ம் திகதி தையிட்டி விகாரையின் முன்பாக விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட 29 பேருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தீர்மானத்திற்கமைய தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை முன்பாக சட்டவிரோத கட்டிடம் என பெயர் பலகை நாட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பிரதேச சபை செயலாளருக்கு பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரியால் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட தையிட்டி பகுதியில் தனியார் காணியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை சட்டவிரோத கட்டிடம் என அடையாளப்படுத்தும் வகையில் பெயர் பலகையை மூன்று மொழிகளிலும் நாட்ட பிரதேச சபை அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இது தொடர்பிலேயே பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் வலிகாமம் வடக்கு பிரதேச சபை செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில், தையிட்டி விகாரைக்கு முன்பாக சட்டவிரோத கட்டிடம் என பெயர் பலகை நடப்படப் போவதாக புலனாய்வுப் பிரிவு மூலம் தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி இவ்வாறான அறிவித்தல் பலகை காட்சிப்படுத்துவதன் மூலம் பௌத்தம் மற்றும் இந்து சமயத்துக்கு இடையிலான நல்லிணத்தில் முரண் நிலை தோன்றுவதுடன் சமாதான சீர்குலைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறான பெயர் பலகை வலிகாமம் வடக்கு பிரதேச சபையினாலோ வேறு அமைப்புகள் மூலமோ நிறுவனங்கள் மூலமோ காட்சிப்படுத்தும் நோக்கம் இருப்பின் அதை சட்டரீதியாக மேற்கொள்ளுமாறும் சட்ட ரீதியற்ற முறையில் அவ்வாறு அறிவித்தல் பலகையை நாட்ட நடவடிக்கை எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கின்றோம் என்றுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபை
குறித்த விடயத்தை நேற்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வில் பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் வெளிப்படுத்தினார்.
அதன்படி, தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் என்ற வகையில் எமது பிரதேச சபையின் சட்ட ஆலோசகரின் ஆலோசனைப்படி பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பாக சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த சிங்கள பத்திரிகைகளில் சிங்கள மொழியில் விளம்பரங்களை பிரசுரிக்க வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றபோதே குறித்த விடயம் முன்வைக்கப்பட்டது.
தையிட்டி விகாரை காணி வரைபடங்களை தெளிவாக பிரசுரித்து விளம்பரங்களை போட சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும், தையிட்டி விகாரையை உடைக்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தவறான தகவல்களை சிங்கள ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதாக சபை அமர்வில் குற்றஞ்சாட்டப்பட்டது.
செய்தி - தீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |