பிள்ளையானை முகநூல்களில் விமர்சிப்பவர்களை அழைக்கும் 4 ஆம் மாடி: சாணக்கியன் குற்றச்சாட்டு
இராஜாங்க அமைச்சர் சி சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பாக இரண்டு தினங்களுக்கு முன்னதாக ''ஒரு கொலைகாரன்'' என முகநூலில் பதிவுகளையிட்ட சிலர் நான்காம் மாடிக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சனல் 4இன் காணொளி
"மக்களை அடக்குவதற்கும் மக்களை கட்டுப்படுத்துவதற்குமாகவே அரசாங்கம் தற்போது புதிய சட்டமூலங்களை கொண்டு வர முயல்கின்றது.
தற்போது கொண்டு வர உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலமாக நாட்டின் ஜனநாயகத்தையும் கருத்து சுதந்திரத்தையும் இல்லாதொழிக்கும் செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன்.
சனல் 4இன் காணொளியில் இலங்கையில் இடம்பெற்ற கொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி. சந்திரகாந்தனுக்கு தொடர்பு இருக்கின்றது என்பதை வெளியிட்டுள்ளது.
புதிய சட்டமூலங்கள்
இந்நிலையில், சனல் 4இன் கருத்தை தங்களது முகநூல்களில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு 4ஆம் மாடியில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.
சனல் 4இல் வெளிவந்த காணொளியை போட்டவர்களுக்கே நான்காம் மாடி விசாரணை என்றால் எதிர்வரும் காலங்களில் இலங்கையில் கொண்டு வரப்போகின்ற புதிய சட்டமூலங்கள் மக்களது பிரச்சினைகளை ஆதங்கங்களை வெளிப்படுத்த முயல்கின்றபோது அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
தற்போது ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமானது இந்த சட்டங்களை வைத்து அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையோ போராடுபவர்களையோ அடக்க முயல்கின்றார்கள் என்றுதான் நான் நினைக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.