சீனாவின் வூஹான் நகரில் பரவிய வேகத்தை விட இலங்கையில் டெல்டா பரவும் வேகம் அதிகம் - பேராசிரியர் சந்திம ஜீவந்தர தகவல்
கொரோனா வைரஸ் திரிபான டெல்டா இலங்கையில் பரவும் வேகமானது சீனாவின் வூஹான் நகரில் பரவிய வைரஸ் திரிபுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு என தெரியவந்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ உயிரியல் ஆய்வுப் பிரிவு நடத்திய பரிசோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் இதற்கு முன்னர் பரவிய திரிபுகளுடன் ஒப்பிடும் போது, டெல்டா திரிபு பரவும் வேகமானது 40 வீதத்தில் இருந்து 60 வீதம் அதிகமான நிலைமையில் இருப்பதாக, இந்த ஆய்வு பிரிவின் தலைவரான பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டில் பொது முடக்கம் அல்லது பயணக்கட்டுப்பாடுகளை உடனடியாக பிறப்பிக்குமாறு அரசாங்கத்திடம் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாளாந்தம் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.