மன்னாரில் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்
மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது பொதுமக்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும் சொந்தமானதாக காணப்படும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை மீண்டும் உரியவர்களுக்கு எவ்வாறு விடுவிப்பது என்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (28) மாலை இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள்
அத்துடன் பொதுமக்களுக்கும், மத ஸ்தலங்களுக்கும் சொந்தமான காணிகள் மற்றும் நிலங்கள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் சோழமண்டல குளம் பகுதியில் உள்ள காணிகளை பயனாளிகளுக்கு வழங்குவது, சாளம்பன் – நெடுங்குளம் பகுதியில் பயனாளிகளுக்கான காணி வழங்கல், தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் அளவீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
காணிப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் , காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் மற்றும் நகர சபை பிரதேச சபை தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |