மண்ணிலிருந்து வெளிவரும் உடல்கள் : மௌனித்த குரல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்?
“டித்வா” எனப்படும் சூறாவளி இலங்கையை தலைகீழாக புறட்டிப்போட்டுள்ளது. இதனால் இலங்கையில் பாதிப்புக்குள்ளாகாத ஒரு இடம் கூட இல்லை.
இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு மையமாக மாறிய இந்த “டித்வா” சூறாவளி நாட்டின் அனைத்து மூலைகளிலும் பாதிப்புக்களையும், சேதங்களையும் உருவாக்கி நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளையும் பதிவு செய்து வருகின்றது.
எனினும், இத்தனை உயிரிழப்புகள் நிகழ இயற்கையின் சீற்றம் தான் காரணமாக இருந்தாலும், உரிய திணைக்களங்கள் இது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தவில்லையா அல்லது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படவில்லையா என்றொரு கேள்வி தற்போது எழுந்து வருகிறது.
இந்நிலையில் தான், இவ்வாறானதொரு அனர்த்தம் இடம்பெற சுமார் 6 நாட்களுக்கு முன்னரே புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் அறியப்படுத்தி, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பில் மக்களை உரிய முறையில் அறியப்படுத்தாமை தொடர்பில் தற்புாது விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பதிவில் பல சந்தர்ப்பங்களில் விளக்கடாகவும், தெளிவாகவும் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அவருடைய கணிப்பின் மற்றும் எதிர்வுகூறல்களின் படி இந்த பேரிடர் அனர்த்தம் இலங்கையை முழுவதுமாக நாசமாக்கியது.
தற்போது அரசியல்வாதிகளாக இருக்கட்டும், எதிர்க்கட்சிகளாக இருக்கட்டும் நாடாளுமன்றத்தில் உயிரைக் கொடுத்து பேசியவர்கள் அன்று ஏன் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்கவில்லை.
ஒருவேளை, முன்னெச்சரிக்கையாக இருந்து தற்போது பேசி வரும் இந்த வீர வசனங்களை அன்று செயலில் காண்பித்திருந்தால் இன்று பல உறவுகள் எங்களுடன் இருந்திருப்பார்கள்.
வளிமண்டலவியல் திணைக்களம் கடந்த 26 ஆம் திகதி பல எசச்ரிக்கைகளை விடுத்திருந்தாலும் கூட இவ்வளவு பெரிய பேரழிவை உருவாக்கக் கூடிய ஒரு அனர்த்தம் தொடர்பில் முறையான ஒரு முன்னெச்சரிக்கையை மக்களுக்கு வழங்கியிருக்க வேண்டும்.
மற்றொரு கோணத்தில் இந்த சூறாவளி மக்களை இந்தளவுக்கு பாதிக்கும் என அவர்கள் கவனயீனமாக அல்லது அறியாமையுடன் இருந்திருந்தார்களாக இருந்தால் அதற்கான உரிய தொழிநுட்பங்கள் ஏன் எங்களிடம் இல்லை? அதனை ஏன் அரசாங்கம் ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை என்றொரு கேள்வியும் எழுகிறது.
இன்று எல்லா இடங்களிலும் மீட்பு பணிகள், தோண்டும் இடமெல்லாம் சடலங்கள்.
எவ்வாறாயினும், இந்த மோசமான பேரிடர் நிலைமை தொடர்பில் ஒழுங்கான முறையில் மக்கள் அறிவுறுத்தப்பட்டு அதற்கு முன்னரே பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பப்பட்டிருந்தால் இன்று பல உயிர்கள் இறுதி சடங்கு கூட இன்றி விண்ணுலகம் செல்ல வேண்டிய நிலை வந்திருக்காது.
இவ்வளவு உயிர்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்? அவர்கள் பதிவியை இராஜினாமா செய்வார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |