இந்தியா செல்வது சந்தேகம் - மீண்டும் வாய்ப்பினை இழக்கும் பசில்! வெளியான காரணம்
சிறிலங்காவின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் (Basil Rajapaksa) இந்திய விஜயம் இரத்தாகும் சாத்தியம் காணப்படுவதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சர், எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கொன்றிற்காக கம்பஹா மேல் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்த நிதி அமைச்சரிடம் இந்திய விஜயம் குறித்து வினவப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளிக்கையில்,
“இந்தியாவில் கொரோனா. தற்போது செல்ல முடியாது அல்லவா?. அனைத்தும் மூடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச, நிதி அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து, தனது முதலாவது விஜயமாக கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது, இந்திய நிதி அமைச்சரை, இலங்கை நிதி அமைச்சர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். எனினும், திட்டமிட்ட வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, நிதி அமைச்சர் சந்திக்க முடியவில்லை.
இவ்வாறான நிலையில், இந்தியாவிற்கு மீண்டும் விஜயம் மேற்கொள்ள தீர்மானித்திருந்தார். இந்தியாவில் பரவிவரும் கொரோனா காரணமாக இந்த விஜயம் பிற்போடப்படும் சாத்தியம் எழுந்துள்ளது.
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள பின்னணியில், இந்தியாவிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.