உயிர்த்தஞாயிறு தாக்குதல் -கைதானவர்களுக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 62 சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சந்தேகநபர்கள் 62 பேரையும், 14 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடித்த நீதிபதி, மேலதிக விசாரணைகளையும் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.