கட்டிட அனுமதி மற்றும் காணி அனுமதிகளை மிக இலகுவாக பெறுவதற்கான இணையத்தளம்
கட்டிட அனுமதி மற்றும் காணி அனுமதிகளை மிக இலகுவாக இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்வதற்காக இணையத்தளம் ஒன்று அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் “உலக நகர திட்டமிடல்” 2023 எனும் தொனிப்பொருளிலான நிகழ்வுகள் வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது, https://np.applications.uda.lk எனும் இந்த இணையத்தளத்தை வடமாகாண சபையின் உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அங்குரார்பணம் செய்து வைத்தார்.'
ஒன்லைன் மூலம் கட்டிட அனுமதிகள்
நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான “உலக நகர திட்டமிடல்” தினத்தை முன்னிட்டு மக்களிற்கான திட்டமிடல் என்ற தொனிப்பொருளில் உள்ளுராட்சி சபைகளில் அபிவிருத்தி அனுமதிபத்திரங்களை நிகழ்நிலை ஊடாக இலகுவில் பெற்றுக் கொள்வதற்கான இணையத்தளம் அங்குரார்பணம் செய்யப்பட்டது.
அதாவது ஒன்லைன் மூலம் கட்டிட அனுமதிகள், காணி அனுமதிகளை உள்ளூராட்சி திணைக்களங்களில் பெற்றுக்கொள்வதற்கான வலைத்தளம் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த வலைத்தளம் முதன்முறையாக நல்லூர் பிரதேச சபை மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைகளிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்களுக்கு விழிப்புணர்வு
ஏனைய உள்ளூராட்சி திணைக்களங்கள் எதிர்வரும் காலங்களில் இந்த வலைத்தளத்தை தமது சபைகளில் அறிமுகம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருந்ததுடன், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வெளிப்படை தன்மை கொண்டதாகவும் பொது மக்கள் அணுக கூடிய வகையில் இந்த வலைத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஓர் நகரத்தின் சிறப்பானதொரு திட்டமிடலானது அந்த நகரத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றுவதற்கான செயற்திட்டமாக அமையப்பெற்றுள்ளது.
