இரசாயன உரமின்மையால் ஏற்பட்ட விளைவு- ஒப்புக்கொண்டது அரசாங்கம்
இரசாயன உரமின்மையால் தேயிலை அறுவடை குறைந்துள்ளது என்பது உண்மைதான் என்று இணை அமைச்சரவை பேச்சாளர், பெருந்தோட்டத்துறை அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண(Dr. Ramesh Pathirana),குறிப்பிட்டார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் அறுவடை பிரச்சனை இல்லை என்றாலும், இந்த மாதம் அறுவடையில் படிப்படியாக சரிவு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
தேயிலைத் தோட்டக்காரர்கள் மற்றும் பிற விவசாயிகள் சோர்வடைய வேண்டாம், ஏனெனில் தற்போது தேவையான உரங்கள் இறக்குமதி செய்து விநியோகிக்கப்படுகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்தார்.
இலங்கையில் தேயிலை உற்பத்தியின் தரத்தை உயர்த்துவதன் மூலம் தேயிலை சாகுபடியை ஊக்குவிக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், சாகுபடியை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தின் மீது விவசாயிகளை நம்பிக்கை வைக்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் கரிம உர உற்பத்திக்கு பற்றாக்குறை இருந்தாலும், சிறிய அளவில் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்ட போதிலும் தரப் பிரச்சனை காரணமாக அதை செய்ய முடியவில்லை என்று பத்திரன கூறினார்.
நானோ தொழில்நுட்பத்தால் உற்பத்தி செய்யப்படும் நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தற்போதுள்ள பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.