வெடுக்கு நாறி மலை அபகரிப்பு : கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியான கண்டனம்..!
சைவர்களுக்குரிய வழிபாட்டு தலமான வெடுக்குநாறி மலையை பௌத்த இடம் என தெரிவித்து வர்த்தமானி வெளியிடப்படஉள்ளதாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை தாம் கண்டிப்பதாக கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் ச.சிவயோகநாதன் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெடுக்குநாறி மலை தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு தலம்
வெடுக்குநாறி மலை தொடர்பாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி (09.04.2026) நாடாளுமன்றில் உரையாற்றும் பொழுது வவுனியா வெடுக்குநாறி மலையில் காணப்படும் தடயங்கள் அனைத்தும் பௌத்தத்திற்குரியது என தெரிவித்தது மட்டுமல்ல விரைவில் வர்த்தமானி வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த கருத்தை நாம் மிக வன்மையாக கண்டிக்கிறோம். வெடுக்குநாறி மலை என்பது தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு தலமாக நீண்டகாலமாக இருந்து வருகின்றது.இங்கு வழிபாட்டு முறைமை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமாக நீண்ட காலமாக சைவ சமயத்தவர்களால் வழிபாடு நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அமைச்சரின் கருத்தை ஏற்க முடியாது
அப்பகுதி மக்களின் வரலாறு, கலாசாரம் மற்றும் தொடர்ச்சியான ஆன்மீகச் செயல்பாடுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறான சூழலில், எந்தவித பரந்த ஆய்வும் இல்லாமல் ஒருதலைப்பட்சமாக இத்தலம் பௌத்த மதத்தினருக்குரியது என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

இந்த ஆட்சியாளர்கள் இதன் மூலம் மிக தெளிவாக தமது இனவாத மதவாத போக்கினை கடைப்பிடிக்கிறார்கள் என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை. இது மிக மோசமான அதிகார துஸ்பிரயோகமாகும்.
இத்தகைய அறிவிப்புகள்: வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சியாகும். தமிழ் மக்களினது மத மற்றும் கலாசார உரிமைகளை மீறும் செயலாகும்.
பதவியில் உள்ளவர்கள் பொறுப்புடன் கருத்து தெரிவிக்க வேண்டும்
பல இன, பல மத மக்கள் இணைந்து வாழும் நாட்டில், பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் சமநிலையுடனும் நியாயத்துடனும் கருத்து வெளியிட வேண்டும். எந்த ஒரு சமூகம் அல்லது மதத்தினரின் உரிமைகளையும் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளை உருவாக்கக்கூடும்.

எனவே, நாம் வலியுறுத்துவது: அமைச்சர் வெளியிட்ட கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். வெடுக்குநாறி மலை தொடர்பாக சுயாதீன மற்றும் உண்மையான விஞ்ஞான ரீதியான ஆய்வு நடத்த வேண்டும்.
அப்பகுதி மக்களின் வரலாற்று மற்றும் வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் நீதியும் சமத்துவமும் நிலைநிறுத்தப்படும் வரை எங்களது ஜனநாயகமான எதிர்ப்பும் நடவடிக்கைகளும் தொடரும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |