கோர விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்
இராவண எல்ல அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக பதுளை மருத்துவமனையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கை மற்றும் கால்களை இழந்துள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
காயமடைந்தவர்களில் 8 சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்றும் வைத்தியர் பாலித ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
தேடும் நடவடிக்கைகள்
இன்று அதிகாலை 4.00 மணி வரை காயமடைந்தவர்களையும் இறந்தவர்களையும் தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் இடிபாடுகளுக்கு இடையில் மேலும் உடல்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் வைத்தியர் கூறினார்.
விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆகவும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதை இன்னும் சரியாகச் சொல்ல முடியாது என்றும், பிற்பகலுக்குள் சரியான எண்ணிக்கை அறிவிக்கப்படும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய பேருந்தின் சாரதியுடன் 30 பயணிகள் இருந்ததாகவும் பேருந்தின் சாரதி உட்பட 06 ஆண்கள் மற்றும் 09 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
காயமடைந்த 06 பெண்கள், 05 ஆண்கள், 03 சிறுவர்கள் மற்றும் 02 சிறுமிகள் சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து பயணிகளை மீட்க உதவிய இருவரும் காயமடைந்து சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தியத்தலாவை, பதுளை மற்றும் பண்டாரவளை மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்துடன் தொடர்புடைய ஜீப்பின் சாரதி கைது செய்யப்பட்டு, எல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
